ஆ - வரிசை ஆடாதொடை

 





ஆடாதோடை ADATODAI

வேறு பெயர் ஆடாதொடை, வாசை.

ஆங்கிலப் பெயர்MALABARNUT

தாவரவியல் பெயர்ADHATODA VASAICA

இச் செடி இந்தியாவிலும் வங்காள தேசம் முற்றும் ஏராளமாயும், மற்ற இடங்களில் சாதாரண மாயும் பயிராகின்றது. இதன் இலை, மா, நுனாயிலைகளைப் போல் 4 – 9  அங்குல நீளமாயும் இரண்டு முதல் மூன்று அங்குலம் அகலமாயும் இருக்கும். செடி நான்கு முதல் பத்து அடி உயரம் வரை வளரும்.

மருத்துவ பகுதிஇலை, பூ, வேர், பட்டை.

சுவை கைப்பு, வீரியம் வெப்பம், பிரிவு கார்ப்பு.

செயல் இசிவகற்றிANTISPASMODIC

கோழையகற்றி ------- EXPECTORANT

நுட்புழுக் கொல்லி ---- GERMICIDE

சிறுநீர் பெருக்கி --------- DIURETIC

இலையின் குணம்

கபாதிக்கம், வாத தோடம், பற்பல சுரம் சந்நிபாதம் 13, வயிற்று நோய், மேலும் தாபசுரம், உட் சூடு இரத்த பித்தம், காசம், சயம், மேல் இளைப்பு, வாந்தி வீக்கம். சூலை. குட்டம். மூலரோகம். பித்த சிலேத்தும பிணிகள், அண்டவாயு ஆகிய இவைகளைப் போக்கும். குரலுக்கு சங்கீதம் பாடக் கூடிய தொனியைத் தரும்.

பாடல்

ஆடாதோடையின் குணத்தை அடைவுடனுரைக்கக் கேளும்

பாடாத நாவும் பாடும் பரிந்துமே தோடம் போகும்

வாடாத பித்தஞ்செத்தும ரோகங்கள் விலகி போகும்

நாடாது வியாதி தானும் நல்விழிக் குழலினாலே

--- ஏடு

ஆடாதோடைப் பண்ண மியருக்கும் வாதமுதற்

கோடா கோடிச் சுரத்தின் கோதொழிக்கும் நாட்டின்

மிகுத் தொழுந்த சந்நிபத்தின் மூன்றும் விலக்கம்

அகத்துநோய் போதரும் மறி

--- அகத்தியர் குணவாகடம்

ஆடாதோ டைக்கிரத்த பித்தமறுங் காச

மானந்த வாயுவுடன் மேளிலைப்பு மேகம்

சூடாகும் தாப சுரம் பித்தக்ப வாத

சுரரோகஞ் சந்நிபாதஞ் சூலை குட்டம்

ஓடாவோ வாந்தி விக்கல் மூலரோகம் முட்கனங்கால்

தொடமிவை யொன்று மண்டி டாதாம்

வாடாத மனாக் கிளர்ச்சி யாகுமிதன் பெருமை

வகுத்துரைத்தனர் முன்னோர்கள் வாழ்ந்திடயாவருமே

-    ஏடு

மருத்துவ குணம் இலை இலைரசம் 10 முதல் 20  துளி வரை எடுத்து தேனுடன் கலந்து கொடுக்க, மேற்கூறிய பிணிகள் நீங்கும். சிறப்பாக இரத்த பித்தம் இருமல், காசம் சாயம் கபரோகங்கள் சுரம், காமாலை பித்தாதிக்கம் தீரும் இலையை மட்டும் கஷாயம் செய்து அதில் தேன் சேர்த்து உபயோகிக்க இரத்தபித்தம், கபசுரம்,இருமல் ஷயம் முதலியன தீரும்.

இரண்டு மூன்று இலைகளை குருகவரிந்து இத்துடன் ஏலக்காய் ஒன்று சேர்த்து இரண்டு ஆழாக்கு வெந்நீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி 30 ml முதல் 50ml வரை நாள் ஒன்றுக்கு மூன்று வேளையாகக் கொடுக்க கபசம்பந்தமான இருமல் சுரம் இரத்த பித்தம் நீங்கும்.

இரண்டு மூன்று கொழுமையான இலைகளைப் பொட்டிப் பொடியாகக் கத்தரித்து ஒரு புது மண் சட்டியிலிட்டு தேன் சிறிது கூட்டி தீபாக்கினியாக எரிக்க ஒருவித நன்மனம் வீசும் அத்தருவாயில் அதிமதுரம் வராகன் எடை ½  திப்பிலி வராகன் எடை ¼ தாளீச பத்திரி விராகன் எடை    ¼  வேண்டுமானால் சித்தரத்தை விராகன் எடை  1/8  எடுத்து ஒன்றிரண்டாக இடித்து சேர்த்து அரைப்படி சுத்த நீர் விட்டு அவைகளை கால் பாகமாக குறுக்கி வடிகட்டி காலை மாலை இருவேளையும் கொடுத்துவர கோழைக் கட்டறும். கபம் வெளிப்படும் கப இருமல் சுவாசகாசம், கபசுரம் போன்றவைகள் நீங்கும்  ( இது அனுபவம்)

ஒரு பங்கு இலைக்கு எட்டுப் பங்கு நீர் சேர்த்து எட்டில் ஒன்றாகக் குறுக்கி வடிகட்டிய கஷாயத்தைச் சீலையில் தேய்த்து ஒற்றிடமிட வீக்கம் சூலை கீல்பிடிப்பு, வாதவீக்கம் வாதப் பிடிப்பால்  உண்டாகும் வேதனை தணியும்.

இலையின் தனிரசம், இரத்த பேதி சீதமும் இரத்தமும் கலந்து உண்டாகும் பேதிகளில் வெகு நன்மைதரும்.

இலையை உலர்த்தி சுருட்டி சுருட்டு போல் செய்து புகை பிடிக்க சுவாசகாசம் தீரும்.

இலை, வேர் இவைகளைச் சமவெடை எடுத்து அதற்குத் தக்கபடி மிளகு கூட்டி ஊறல் கஷாயம் செய்து கொடுக்க இரைப்பு உப்புசம் ஈளை இருமல் சயம் சுரம் தணியும்.

சுரச மெழுகு

இலையை இடித்து பிழிந்து சாற்றை ஒரு புதிய சுத்தமான மண் பாண்டத்தில் விட்டு மெழுகு பதமாய்க் காய்ச்சி இரண்டு முதல் ஐந்து குன்றியளவு தனியாக அல்லது திப்பிலிச் சூரணம் கூட்டியேனும் நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு முறை உட்கொள்ள கப்பப் பிணிகள் குணப்படும்.

வேறு இல்லை ரசம் ஒரு பங்கு தேன் அல்லது இஞ்சிச்சார் அரைப்பங்கு ஒன்று சேர்த்து மெழுகு பதமாய்க் காய்ச்சி இரண்டு முதல் நான்கு குன்றி அளவு நாள் ஒன்றுக்கு மூன்று முறை கொடுத்துவர சுவாசகாசம் ஈளை, இருமல் இளைப்பு நோய் போன்றவைகள் தணியும்.

பூ பூவை வதக்கி இருகண்களில் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் வியாதிகள் தீரும்.

பட்டை இதைக் கசாயம் செய்தாகிலும் சூரணஞ் செய்தாகிலும் சுரம், இருமல் சுவாசகாசம் சாயம் போன்ற நோய்களுக்கு கொடுக்கலாம்.

வேர்க் குணம்

இதனால் இருமல் அக்கினிமாந்தம், பித்தாதிக்கம் கடின சுவாசம் கழுத்துவலி முதலிய பிணிகள் தீரும்.

பாடல்

காசமோடு மந்தங் கதித்தபித் தங்கொடுஞ்சு

வாசங் கழுத்து வலிமுதநோய் உசியே

ஓடாதிராதில் கொடுநாளும் மொண் கொடியே !

ஆடாதோடைத் தூருக்கஞ்சி

--- அகத்தியர் குணவாகடம்

மருத்துவ குணம் ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் கஷாயம்மிட்டு அதில் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க காச ரோகம் நீங்கும்.

ஆடாதொடைவேர், கண்டங்கத்திரி வேர் சீந்தில் கொடி வகைக்கு பலம் கால் கூடிய எடைக்கு பதினாறு பங்கு நீர் சேர்த்து கமாலாக்கினயாய் எரித்து எட்டில் ஒன்றாகக் குறுக்கி வடிகட்டி அதில் தேன் கொஞ்சம் சேர்த்து நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை கொடுத்துவர கப இருமல் கோழைக் கட்டு கபசுரம் தணியும்.

ஆடாதோடை திராட்சை, கடுக்காய் இவற்றின் கஷாயத்தில் தேனும் அல்லது சருக்கரையும் கூட்டி உட் கொள்ள கொடுமையான இரத்த பித்த சுவாசகாசம் தீரும்.

ஆடாதோடை வேர், கண்டங்கத்திரிவேர் சுக்கு கொள்ளு இவைகள் சேர்ந்த கஷாயத்தில் அல்லிக் கிழங்கின் பொடியைக் கூட்டை உபயோகிக்க சுவாசகாசம் தீரும்.

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி